என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அர்ஜூன் சம்பத்"
இந்து தீவிரவாதி மற்றும் இந்து என்பது மாற்றான் சொல் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்த கமலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
இந்து என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு கலாச்சாரம். அடையாளம். கருட புராணத்திலேயே இந்துஸ்தானம் உள்ளது. இந்து என்பது வெறும் சொல் அல்ல. வாழ்வியல் நெறியாகும். இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் சுட்டுக்கொன்றார் என்பதற்காக அதனை சீக்கிய தீவிரவாதம் என்று கூற முடியுமா? ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று கூறமுடியுமா?
எனவே இந்து தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பதன் மூலம் கமல் வரலாற்று பிழையை செய்துள்ளார். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது. காந்தியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோட்சேயிடம் இந்து மதம் சொல்லவில்லை.
விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது கமல் என்ன பாடுபட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி பாதிப்புக்குண்டான கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானது.
இடதுசாரி சிந்தனை கொண்டவர்களுடன் கமலுக்கு ஏற்பட்ட தொடர்பே இதற்கு காரணம். தான் எழுதியுள்ள யார் மகாத்மா? என்கிற புத்தகத்தை கமல் படிக்க வேண்டும். இந்து என்பது மாற்றான் சொல் என்று கூறும் கமலுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஆவணங்களோடு தயாராகவே உள்ளேன்.
கமல் தயாரா? தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும்.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இந்த நிலையில் குமரிக்கு வரும் ராகுல்காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அஞ்சுகிராமம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அனுமதி இன்றி கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதே போல் அஞ்சு கிராமத்தில் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா இளைஞரணி மாவட்ட செயலாளர் அருள் சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அருள்சிவா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #rahulgandhi #arjunsampath
சீர்காழி:
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தருமை ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட செயல் படக்கூடிய திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி சட்டநாதர் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தாமல் கால தாமதித்து வருவது என்பது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
ஜேக்டோ-ஜியோ அமைப்பு எதிர்க் கட்சிகளால் தூண்டி விடப்பட்டு வருகிறது. ஜேக்டோ ஜியோ அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்தினை சீர்குலைக்க வேண்டும், மக்களுக்கு அரசாங்கத்தின் எந்த நல்ல திட்டங்களும் சென்றடைய கூடாது என உள்நோக்கத்துடன் ஒரு சில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். ஜேக்டோ- ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும்.
தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடிய வகையிலும் தேர்தல் வரக்கூடிய இந்த சூழ்நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளக் கூடிய அவசர கால சூழ்நிலையில் அரசு எந்திரத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் இந்த போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தினை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தூண்டி விடுகிறார்.
ஜேக்டோ- ஜியோ போராட்டத்தினை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் ஜேக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு இல்லை. அரசால் நிறைவேற்றவே முடியாத கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தினை தொடர்கிறார்கள். தலைமை செயலக ஊழியர்களையும், போக்குவரத்து ஊழியர்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிர்கட்சிகள், சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டந் தோறும் நவோதயா பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களை பாதிக்காத வகையில் கேபிள் டிவி கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #arjunsampath #jactogeo #teachersprotest
கும்பகோணம்:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை மையமாக வைத்து ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை, சிலம்பம், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் சேவல் சண்டை, கிடா சண்டை போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளை தடைசெய்வதால் பொங்கல் பண்டிகையின் உற்சாகம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே சேவல் சண்டை, கிடா சண்டை உள்ளிட்ட கிராம விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த விழாவுக்கு இந்துக்களை வரவழைத்து கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதற்காக தற்போது தமிழர்களின் சடங்கு சம்பிரதாயங்களை கொண்டாடி வருகிறார்கள்.
கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தெகல்கா நிறுவனத்தை யாரோ பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு கட்சியினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மற்றொரு கட்சியின் பெயரை கெடுக்க தெகல்கா நிறுவனம் செயல்படுகிறது. எனவே உண்மை நிலையை கண்டறிய மத்திய- மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் அபிஷேக பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அந்த அபிஷேக பாலுக்கு பதிலாக பக்தர்களுக்கு பால்கோவா வழங்க தொடங்கி உள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மீண்டும் பக்தர்களுக்கு அபிஷேக பால் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #arjunsampath #ThirunageswaramRahuTemple
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , கைகளில் தென்னங்கன்றுகளுடன் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தார்.
கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தென்னை மரங்கள் அதிகமாக சேதமானதால் தேங்காய் விலை அதிகமாகும் சூழ்நிலை உள்ளது. இதனை சரிசெய்ய விவசாயிகளுக்கு புதிய தென்னங்கன்றுகளை தமிழக அரசு வழங்க வேண்டும். வீடு மற்றும் விவசாய பயிர் சேதங்களை விரைவாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. அதனை உடனடியாக மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
அதற்கு முன்பு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன், டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது, இலவசமாக மண்எண்ணை வழங்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது மக்கள் மண்எண்ணையை அதிகம் பயன்படுத்துவதில்லை. எனவே மக்களுக்கு கியாஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி வந்து பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்து மக்கள் கட்சி - தமிழ்நாடு சார்பில், சபரிமலை புனிதம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், கேரள அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
‘‘தமிழ்நாடு முழுவதும் சுவாமி அய்யப்பனை இழிவுபடுத்தும் வகையிலும், அய்யப்ப பக்தர்களின் மனம் புண்படும் வகையிலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசி வருகிறார். சீமானின் பேச்சை கண்டித்தும், சபரிமலை அய்யப்பசாமி கோவிலின் புனிதம் கெடும் வகையில் செயல்பட்டு வரும், பினராயி விஜயன் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக்கோரியும், சபரிமலையின் புனிதம் காக்க சிறப்புச்சட்டம் இயற்ற கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிலைகள் முழுமையாக மீட்கும்வரை நீட்டிக்க வேண்டும்
இன்று மலேசியாவில் தமிழர்கள், கோவில்கள், தமிழ் பள்ளிக்கூடங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், சேவ் சிரியா இயக்கம் நடத்தியவர்கள் எங்கே சென்றார்கள்?. மலேசியாவில் தமிழர்கள் மற்றும் கோவில்களை பாதுகாக்க, பிரதமர் மோடி, மலேசிய அரசை அழைத்து பேசி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்கள் கட்சி சார்பிலும், இதற்காக மலேசிய தூதரகத்தில் மனு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக உயர்நீதி மன்றம், பொன்.மாணிக்கவேலுக்கு, ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கியிருப்பதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. அனைத்து ஆன்மீகவாதிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். வெகு நேர்மையாக, துணிச்சலாக செயல்பட்ட பொன்.மாணிக்கவேலுக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். 500-க்கும் மேற்பட்ட வழக்குகளில், குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், களவுபோன சிலைகள் மீட்கப்படும் வரை, பொன்.மாணிக்கவேலை, இந்த பதவியில் நீட்டிப்பு செய்ய வேண்டும். ஓசூர் பகுதியில், ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு, இந்த பகுதியில் சாதிக்கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சாதி கட்சிகளை தடை செய்தால் மட்டும்தான், ஆணவக்கொலைகள் முடிவுக்கு வரும்’’.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #arjunsampath #ponmanickavel
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக பக்தர்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகளை உதாசீனப்படுத்தி உள்ளது. குறிப்பாக முல்லை பெரியார் அணை பிரச்சினை, கூம்பு வடிவ ஒலிபெருக்கி, காவிரி பிரச்சினைகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை.
அய்யப்பன் கோவில் விவகாரத்தில் மட்டும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த ஆர்வமாக உள்ளனர். ஆனால் இதற்கு மக்கள் காட்டிய எதிர்ப்பை கண்டு இப்போது பின்வாங்கியுள்ளனர்.
முதல்-மந்திரி பினராய் விஜயன், வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று 2 பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு முதல்-மந்திரி பினராய் விஜயனே காரணம். இதன்மூலம் நாடு முழுக்க கலவரம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
சபரிமலை கோவில் பிரச்சினைக்காக போராடிய பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரிகள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
மத்திய அரசும் இப்பிரச்சினையில் வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்டம் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் அய்யப்பன் கோவிலை மத்திய அரசே ஏற்றுநடத்த வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் போடுவது இப்பிரச்சினைக்கு தீர்வை தராது. இப்பிரச்சினை தொடர்பாக நாளை 21-ந் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெறும்.
தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறும் வேளையில் நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #ArjunSampath
திருச்செங்கோட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோர்ட் பல முறை உத்தரவிட்டும், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தேர்தல் நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் தான் மதுவினால் அதிக இளம் விதவைகள் உள்ளனர். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தமிழகத்தில் ஆன்மிக அரசியல் கொண்டு வர ராமராஜ்யம் பிரச்சார யாத்திரை நடத்தி வருகிறோம்.
சபரிமலையில் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது. 10 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் போகலாம் என சட்டத்தில் உள்ளது. ஆனால் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது அய்யப்ப பக்தர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்து கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு கோர்ட் தலையிடாமல் இருப்பதற்கு பாராளுமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #ArjunSampath
தூத்துக்குடி:
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பசுமை தீர்ப்பாயத்தின் குழு தூத்துக்குடி வந்த போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மனு கொடுக்க மக்கள் வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்தவர்களை தங்களின் மனுக்களை குழுவினரிடம் கொடுக்க தடையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதையும் மீறி சென்னையில் 35 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். அதே போல் எத்தனால் கலந்த எரிபொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மின்சாரத்தில் இயங்க கூடிய வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்க சில சக்திகள் முயற்சித்து கொண்டு இருக்கின்றன. இதை தி.மு.க. ஆதரித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குகிறது. இது தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சவால். இதனை அவர் சமாளிக்க வேண்டும்.
தாமிரபரணி புஷ்கர விழாவில் 1 கோடி பேர் கலந்து கொள்ள உள்ளார்கள். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய இந்த விழாவை நடத்த நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இந்த விழா நடந்துவிட்டால் தென் மாவட்டங்களில் ஆன்மீக அரசியல் பலப்பட்டு விடும், இந்து ஒற்றுமை ஏற்பட்டு விடும் என்ற கண்ணோட்டத்தில் இந்த விழாவை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். அரசு இந்த நிகழ்ச்சிக்கு நிதி ஒதுக்கி, விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் 2 இடங்களில் விழா நடத்த தடை விதித்து உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த தடையை மீறி விழா வெற்றிகரமாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்தியில் மீண்டும் மோடி பிரதமராகவும், தமிழகத்தில் ரஜினிகாந்த் முதல்-அமைச்சராகவும் வலியுறுத்தி 108 நாள் பிரசாரத்தை இந்து மக்கள் கட்சி தொடங்கி உள்ளது.
ஓசூரில் தொடங்கிய இந்த பிரசார பயணம் ரஜினியின் பூர்வீக கிராமமான நாச்சிக்குப்பத்தில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்கிறார்கள்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-
மிஷன் 2019 என்ற தலைப்பில் ஆன்மீக அரசியல் பிரசார பயணம் தொடங்கப்பட்டு உள்ளது. மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சி முடிவுக்கு வந்து ஆன்மீக அரசியல் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக ரஜினி முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது.
எங்கள் பிரசார குழுவினர் 108 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்வார்கள். அந்த பிரசார வேனில் மோடியின் சாதனை பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Modi #Rajinikanth #ArjunSampath #HinduMakkalKatchi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்